மிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்…
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி . மிலாத்-உன்-நபி, மீலாதுன் நபி என பல பெயர்களிலும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபடுவது வழக்கம். இஸ்லாமிய இறை தூதரான முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மிலாடி நபி திருநாள், செப்டம்பர் 16ம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிறை தெரியாததன் காரணமாக தற்போது செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசின் பொது விடுமுறை தினம் செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். முகம்மது நபிகளை நினைத்து சிறப்பு தொழுகைகள் நடத்தி, அனைவருடனும் வாழ்த்துக்கள், பரிசுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதும் இஸ்லாமியர்களின் வழக்கமாக உள்ளது.
Comments are closed.