திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே பாலத்தில் விரிசலை சீரமைக்கும் பணி தொடக்கம்!!…

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாநகர பகுதியில் பொன்மலை ஜி.கார்னர் மேம்பால பகுதி பல்வேறு மாவட்டங்களுக்கும் அனைத்து கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பிரதான வழித்தடமாக உள்ளது. இந்த பாலத்தில் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆர்.இ.பிளாக்குகளில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு என்.ஐ.டி. நிபுணர்குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு மண்சரிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி, உடனடியாக பொன்மலை ஜி.கார்னர் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினரால் 60 நாட்களில் பாலம் சீரமைக்கப்பட்டது. அதுவரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிடப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்தநிலையில் சீரமைக்கப்பட்ட இந்த பாலத்துக்கு அருகே சங்கிலியாண்டபுரத்துக்கு செல்லும் அணுகுசாலைக்கு அருகில் உள்ள பாலத்தில் கடந்த 10-ந் தேதி 2 இடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விரிசல் ஏற்பட்ட பகுதியை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ் ஆய்வு செய்தார். பின்னர் பால விரிசலை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பாலத்தில் விரிசலை சரி செய்வதற்காக அங்கு சாரம் கட்டி தொழிலாளர்கள் தற்போது பணிகளை தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

Comments are closed.