மதுரை நீதிமன்றம்: நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்கி அரசாணை வெளியிடுக…

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி  என பலர் உள்ளனர்.  இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி,  திருச்சி, தஞ்சை, விருதுநகர் என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.   இந்நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.6,000 கோடி முதலீடு வசூலித்துள்ளனர்.  ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் இருந்துள்ளனர்.   இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி,நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.  இந்நிலையில், கைது செய்யப்பட்ட சார்லஸ், இளையராஜா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஜெயின்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் வேலு என்பவர் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த அனைத்து மனுக்களும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில், நிறுவனத்தின் பெயரில் வாங்கியுள்ள சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும், பணத்தை திருப்பித் தரவும் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. அரசு தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் உள்துறை செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தற்போது வரை எடுத்த நடவடிக்கை குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட மதுரை  உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்து  விசாரணையை தள்ளி வைத்தார்.

 

- Advertisement -

Comments are closed.