மே 5ஆம் தேதியோடு விடைபெறுகிறது ‘ஸ்கைப்’ தளம் – மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு

Skype| கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப், 2005-ஆம் ஆண்டில் 50 மில்லியன் பயனர்களை எட்டியதாக கூறப்படுகிறது.

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வரும் மே 5-ம் தேதி முதல் ஸ்கைப் சேவையை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, அதன் புதிய தொழில்நுட்பத் தளமான மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் பயன்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம், பயனர்கள் மத்தியில் டீம்ஸின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2003-ம் ஆண்டு அறிமுகமான ஸ்கைப், வீடியோ அழைப்புகள், கான்ஃபரன்சிங், ஒலி அழைப்புகள் போன்ற வசதிகளை வழங்கிய ஒரு முன்னணி செயலியாக இருந்தது. இத்துடன், உடனடி செய்தி பரிமாற்றம் (Instant Messaging), கோப்பு பகிர்வு (File Transfer) போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப், 2005-ஆம் ஆண்டில் 50 மில்லியன் பயனர்களை எட்டியதாக கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட், ஸ்கைப் பயனர்களுக்கு டீம்ஸில் தங்கள் பழைய கணக்குகளை பயன்படுத்தி உள்நுழைய (Log in) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், அவர்களின் முந்தைய உரையாடல்கள், தொடர்புகள் மற்றும் முக்கிய தகவல்கள் புதிய தளத்தில் கிடைக்கும். மேலும், பயனர்களுக்கு அனுகூலமாக, கணக்குகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை எளிதாக அமைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஸ்கைப்பின் கட்டண சந்தா சேவையை (Subscription Service) நிறுத்தியுள்ளதோடு, அதன் ஆதரவை முழுமையாக டீம்ஸுக்கு மாற்றியுள்ளது. பயனர்கள், மே 5-ம் தேதி வரையிலேயே ஸ்கைப் பயன்பாட்டை தொடர முடியும்.

 

இந்த மாற்றம், நவீன தகவல் தொடர்பு மற்றும் அலுவலகச் சூழலில் அதிக பயனுள்ள ஒரு தளமாக டீம்ஸை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் விளக்கியுள்ளது. ஸ்கைப்பின் இடத்தை டீம்ஸ் அடையுமா? அல்லது பயனர்கள் வேறு மாற்று செயலிகளை தேர்வு செய்யுமா? என்பது காலத்தால் தீர்மானிக்கப்படும்.

- Advertisement -

Comments are closed.