இசைஞானிக்கு அரசு விழா.. முதலமைச்சரே அறிவிச்சுட்டாரு..

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்திய இசையின் அடையாளமாக உலகம் முழுவதும் ஓங்கி நிற்கிறார். கடந்த 8ஆம் தேதி லண்டனின் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டுக்கு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இசைஞானிக்கு அரசு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இசைஞானி இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார்.

தேசிய விருதுகள் இளையராஜா பல வென்றுள்ளார். பல சர்வதேச விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளது. 82 வயதை எட்டிய இளையராஜா இசையில் கடந்த ஆண்டில் மட்டும் தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஜமா மற்றும் விடுதலை பாகம் இரண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் இளையராஜா கடந்த ஆண்டே தான் ஒரு சிம்பொனியை உருவாக்கியுள்ளதாகவும், அதுவும் ஒரு மாதத்தில் எழுதி முடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இளையராஜா சிம்பொனி எழுதியது மட்டும் இல்லாமல், அதை சர்வதேச அளவில் சிம்பொனியில் ஜாம்பவான்களாக உள்ள பல நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் விமர்சனத்திற்கு அனுப்பியும் வைத்துள்ளார். அதனைப் பார்த்த அவர்கள் பெரும்பாலும், இந்த இசை கிளாசிக் வகையைச் சார்ந்தது, அதாவது, இந்த இசை 18ஆம் நூற்றாண்டு இசையைப் போல் உள்ளது என இளையராஜாவை பாராட்டினார்கள். இந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய வேண்டும் என இளையராஜா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு கடந்த 8ஆம் தேதி சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து முடித்தார்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று நன்றி தெரிவித்தார் இளையராஜா. அப்போது லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தனது சிம்பொனி குறித்து ஆர்வமாக பேசினார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என பதிவிட்டுள்ளார். இது இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த அரசு விழா இசைஞானியின் பிறந்த நாளான ஜூன் 2ஆம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.