ரம்ஜானுக்கு லீவெல்லாம் கிடையாது..இன்று வழக்கம் போல் இயங்கும் வங்கிகள்! ஆர்பிஐ சொல்லும் காரணம்! என்ன?
சென்னை: இஸ்லாமியர்களை புனித பண்டிகையில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வங்கிகள் இன்று செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஒருபுறம் வங்கி ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் பல்வேறு காரணங்கள் இருப்பதால் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறுகின்றனர்.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரம்ஜான் மாதத்தில் அதிகாலை தொடங்கும் நோன்பு கடைபிடிக்கும் மக்கள் மாலை தொழுகைக்கு பிறகு நோன்பை முடித்துக் கொள்வர்.
இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இந்த மாதத்தில், தராவீஹ் எனும் இரவு நேர சிறப்பு தொலுகை நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும். தொடர்ந்து நோன்பு முடிந்ததும் அனைவரும் கூடி தொழுகைக்கு பிறகு உணவு எடுத்துக் கொள்வார்கள்.
பல நூறு ஆண்டு காலமாய் இஸ்லாமியர்கள் இதனை கடைப்பிடித்து வருகின்றனர். இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இடங்களில் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு முடிந்து புனித ரமலானை கொண்டாடி வருகின்றனர். இதற்காக மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், அரசுத் றை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை என்றாலும் வங்கிகள் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே 31 ஆம் தேதியான இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்கள் விடுமுறை வந்ததும், 31ஆம் தேதியான இன்றும் விடுமுறை என்றால் மூன்றாவது நாளாக விடுமுறை வந்து விடும்.
ஆனால் அதில் கூட பிரச்சினை இல்லை என்றாலும், 2024 – 2025 நிதியாண்டு இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதியும் நாளை 2025 – 2026 ஆம் நிதியாண்டு தொடங்குகிறது. இதன் காரணமாகவே இன்று வங்கிகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று வங்கிகள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் வருமான வரி, ஜிஎஸ்டி ,சுங்கம், கலால் உள்ளிட்ட அரசு வரி செலுத்துவது, ஓய்வூதியம் மற்றும் அரசாங்க மானியங்கள், அரசு சம்பளம் மற்றும் பிற பரிவர்த்தனைகள், அரசு திட்டங்கள், மானியங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் ஆகியவை வங்கியில் மூலம் இன்று செயல்படுத்தப்படும். அதே நேரத்தில் மேகாலயா, சத்தீஸ்கர், மிசோரம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் தவிர அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் நாளை வங்கிகள் மூடப்படும் என கூறப்படுகிறது.
Comments are closed.