Ask for Me: `இனி கூகுள் உங்களுக்காக பேசும்..’ – புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் கூகுள்!
Google தனது பயனாளர்களுக்கு ‘ஆஸ்க் ஃபார் மீ’ ( Ask For Me) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் என்ன பொருள்கள் உள்ளது என்றும் அதன் சேவைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. பயனாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான டீப் சீக் சாட்பாட் ஏ.ஐ உலகின் புதுவரவாக இருந்தாலும், தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.
காரணம், இதில் தகவல்கள் சற்று தெளிவாகவும் எளிமையாகவும் கிடைப்பதனால் பயனர்கள் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது போன்று ஏ.ஐ தொழில்நுட்ப உலகம் போட்டிப் போட்டுக் கொண்டு பயனாளர்களுக்கு புதிய புதிய வசதிகளை அள்ளி தருகின்றன. அந்த வரிசையில் தற்போது கூகுளும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது.
கூகுள் தற்போது தனது பயனாளர்களுக்கு ‘ஆஸ்க் ஃபார் மீ’ ( Ask For Me) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்கி உள்ளது. இந்தப் புதிய அம்சத்தின் மூலம் பயனாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வணிக நிறுவன கடைகளில் எளிதாக பொருள்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் விசாரித்துக்கொள்ள முடியும்.
தெளிவாக கூறவேண்டுமானால், உங்களுக்கு எதாவது ஒரு கடையில் பொருளோ, சேவையோ தேவைப்படுகிறது என்றால் அதற்காக நீங்கள் அந்தக் கடைக்கு நேரடியாக போன் செய்து விசாரிக்கத் தேவையில்லை. மாற்றாக, கூகுளே அதனுடைய ஏ.ஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உங்களுக்காக அந்த கடைக்கு போன் செய்து விவரங்களை கேட்டு உங்களுக்கு தரும். இந்த புதிய வசதியினை தற்பொழுது சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் கூகுள் கொடுத்து வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த சேவை நீட்டிக்கப்பட உள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.
Comments are closed.