சென்னை டூ திருச்சி சிறப்பு ரயில்..ரிசர்வேஷன் எப்போது? கோடைலீவுக்கு சொந்த ஊர் போறவங்களுக்கு ஜாக்பாட்

சென்னை: கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இயக்கப்படும் தேதி மற்றும் முன்பதிவு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் – மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள், கோடை விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சொந்த ஊரில் உள்ள தாத்தா, பாட்டி வீடுகளுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விடுமுறையை கழித்து வருவார்கள்.

சென்னை டூ திருச்சிக்கு சிறப்பு ரயில்

இதனால், கோடை விடுமுறை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதிலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஓபன் ஆன சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்துவிட்டன.

பேருந்துகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் செல்லும் போது சிரமம் என்பதால் ரயில் பயணத்தையே பயணிகள் பெரும்பாலும் விரும்புவார்கள். அது மட்டும் இன்றி பேருந்துகளில் ரயிலுடன் ஒப்பிடும் போது கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால், சிறப்பு ரயிலை அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கோடை விடுமுறையில் பயணிகள் மனதை குளிரவைக்கும் விதமான அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 4 முதல் 27 ஆம் தேதி வரை

அதாவது சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருச்சியில் இருந்து வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் (வாரத்தில் 3 நாட்கள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் (வண்டி எண்.06190) நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

முன்பதிவு எப்போது?

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் 27- ஆம் தேதி வரையில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரயில் (06191), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருச்சி, பன்ருட்டி விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

- Advertisement -

Comments are closed.