மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.
பின்னர், 11 அடி அகலமும், 54 அடி நீளமும் கொண்ட குண்டம் மைதானம் தயார் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு அங்கு வாண வேடிக்கையுடன் 15 டன் விறகுகள் கொண்டு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழியில் பல்வேறு வகையான மலர்களும் தூவப்பட்டன.
குண்டம் இறங்க காப்பு கட்டியிருந்த பக்தர்களும் குண்டம் இறங்குவதற்கு தயாராக இருந்தனர். காலை 6 மணிக்கு தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பூ எடுத்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
Comments are closed.