உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் – Manus

சீன முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் உதவியுடன், ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்ட மேனஸ், தற்போது வலைதளத்தில் முன்னோட்ட அளவில் மட்டுமே கிடைக்கிறது.

 

சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஆன மேனஸ் (Manus), சிக்கல்கள் நிறைந்த நிஜ உலகப் பணிகளைக் கையாளும் திறனுடன் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

 

Manus – AI agent

சீன முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் உதவியுடன், ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்ட மேனஸ், தற்போது வலைதளத்தில் முன்னோட்ட அளவில் மட்டுமே கிடைக்கிறது. அதன் manus.im வலைதளத்தில் இருக்கும் செயல் விளக்க வீடியோ, படிப்படியான அதன் செயல்முறை மூலம் தனிப்பயன் வலைத்தளத்தை உருவாக்கும் திறனைக் காட்டுகிறது.

2025-ஆம் ஆண்டில் பல மேம்பட்ட ஏஐ மாடல்களுடன் சீனா முன்னிலை வகிக்கிறது. அண்மையில் கூட தனது டீப்சீக் ஏஐ மூலம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை சீனா அலறவிட்டது நினைவிருக்கலாம். இது, அமெரிக்க ஏஐ மேம்பாட்டிற்கான “ஸ்புட்னிக் தருணம்” என்று கூட விவரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களால் செய்யப்படும் செலவில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டு சீனாவால் மிகப்பெரிய மொழி மாதிரிகளை (LLMs) உருவாக்க முடிந்தது. இந்த வகையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை மீண்டும் செய்ய முடியும் என்பது மேனஸ் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

 

ஜப்பான் பயணத்திற்கான திட்டத்தை வகுத்தல், டெஸ்லாவின் பங்குகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்குதல், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான படிப்புகளை உருவாக்குதல், வெவ்வேறு காப்பீட்டுக் கொள்கைகளை ஒப்பிடுதல் மற்றும் வணிகத்திலிருந்து வணிகத்திற்கு சப்ளையர் ஆதாரத்தில் உதவுதல் போன்ற உதாரணங்களை வழங்குவதன் மூலம், நிஜ உலக சிக்கலான பணிகளில் மேனஸ் கவனம் செலுத்துவதாக அதன் வலைத்தளம் கூறுகிறது.

பொதுவான ஏஐ அசிஸ்டெண்ட்களின் மூன்றாம் தரப்பு அளவீடான GAIA அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட ஓபன் ஏஐ-ன் ஆழமான ஆராய்ச்சியை விடவும் மேனஸ் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

அதன் நிறுவன அமைப்பு, குழு மற்றும் அடிப்படை மாதிரிகள் பற்றிய வரையறுக்கப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், மேனஸ் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அதன் மாதிரி வீடியோ, ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.

கடந்த ஜனவரியில் டீப்சீக் ஏஐ-ன் R1 மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பே மேனஸ் இந்த அளவுக்கு கவனம் பெற காரணம். தங்கள் சூழலுடன் தொடர்பு கொள்ளவும், தரவைச் சேகரிக்கவும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான பணிகளைத் தன்னியக்கமாகக் கையாளவும் கூடிய பொது நோக்கத்திற்கான ஏஜென்டுகள், AI பயன்பாடுகளின் எதிர்காலமாக பரவலாகக் கருதப்படுகின்றன.

 

முடிவுகளை வழங்கும் மேனஸ்

மேனஸால் தன்னிச்சையாக வலைத்தளங்களில் உலாவ முடியும். பல்வேறு திறன்களைப் பயன்படுத்தி அதன் தொடர் செயல்பாட்டை நிகழ்நேரத்தில் காட்சிப்படுத்த முடியும். மனதையும் செயல்களையும் இணைக்கும் ஒரு பொதுவான ஏஐ ஏஜென்ட் இது என்று டெவலப்பர்கள் இதனை விவரிக்கின்றனர்.

“இது வழக்கமான சாட்பாட் அல்ல. இது கருத்தாக்கத்திற்கும் செயல்படுத்தலுக்கும் இடையிலான தூரத்தை குறைக்கும் ஒரு தன்னிச்சையான ஏஜென்ட். மற்ற ஏஐ ஏஜென்ட்கள் யோசனைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும் அதே வேளையில், மேனஸ் முடிவுகளை வழங்குகிறது” என்று டெக் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

மேனஸ் சில சந்தேகங்கள்

மேனஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, இருப்பினும் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இது இலவச பயன்பாட்டிற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இந்த ஏஐ-ன் செயல்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்த சந்தேகங்களும் பரவலாக எழுந்து வருகின்றன. மேனஸ் ஏஐ-ன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. கிரிப்டோகரன்சி மோசடிகள் தொடர்பான பக்கங்களுடன் தொடர்பில் இருந்ததால் அதன் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக எக்ஸ் நிர்வாகம் கூறுகிறது,

மேனஸ்-ன் தொழில்நுட்பத்தின் அசல் தன்மை குறித்தும் கேள்விகள் எழுகின்றனர். ஏனெனில் இந்த மாடல் ஏற்கனவே உள்ள பெரிய மொழி மாதிரிகளை (LLMs) அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அது குறித்த முழு விவரங்களை குழு வெளியிடவில்லை. மேலும் இது டீப்சீக்கின் அடித்தள மாதிரிகளிலிருந்து முற்றிலுமான வேறுபடுகிறது.

இதை உருவாக்கிய 33 வயதான சியாவோ ஹாங், வுஹானின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2015-ல் பட்டம் பெற்றவர். சியாவோ இதற்கு முன்பு சில பிரபலமான WeChat-அடிப்படையிலான ப்ளக்-இன் பயன்பாடுகளை உருவாக்கினார்.

2022-ம் ஆண்டில், அவர் Monica.ai என்ற செயற்கை நுண்ணறிவு மாடலை அறிமுகப்படுத்தினார். இது ஒரு பிரபலமான AI அசிஸ்டெண்டாகும். இது மொபைல் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் பிரசவுர் எக்ஸ்டென்சனாகவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

- Advertisement -

Comments are closed.